Tuesday, August 30, 2011

இனிமேலும் வேண்டாம் தீக்குளிப்பு,மரணதண்டனை!!

தீக்குளிப்பு உயிர்த் தியாகங்கள் இனிமேலும் வேண்டாம் - கனேடியத் தமிழர் பேரவை
[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 01:35.02 PM GMT ]
தாய்த் தமிழகத்தில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருடைய தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தீக்குளித்து செல்வி. செங்கொடி உயிர் துறந்த செய்தி கேட்டு நெஞ்சம் கனத்து நிற்கின்றோம்.
செல்வி.செங்கொடியின் உயிர் தியாகத்தை கனேடியத் தமிழர் பேரவையும், கனேடியத் தமிழர்களும் தலை வணங்கி மதிக்கின்ற அதே நேரத்தில் இது போன்ற உயிர்த் தியாகங்கள் இனிமேலும் வேண்டாம் என்று எமது தமிழக உறவுகளினது கரம் பற்றி மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
35 வருடங்களுக்கு முன்பு நாம் வாழும் கனடா நாட்டிலே மரணதண்டனை ஒரு கொடூரமான தண்டனை எனக் குறிக்கப்பட்டு, சட்டத்தில் இருந்து மரணதண்டனை முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டதை நாங்கள் இத்தருணத்தில் நினைவு கூருகின்றோம்.
கனேடிய விழுமியங்களைப் பின்பற்றும் கனேடியத் தமிழர்களாகிய நாங்கள், கனடா நாட்டைப் போலவே எந்த நாட்டிலும் மரணதண்டனை இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
செல்வி.செங்கொடி போன்ற தமிழின உணர்வாளர்களின் உயிர் தியாகங்களைப் புரிந்துகொண்டாவது, இந்திய நடுவன் அரசும், அதன் அதிபரும் இம் மூவருக்குமான மரணதண்டனையை இரத்துச் செய்யுமாறு கனேடிய விழுமியங்களின் பெயராலும், மனிதநேயத்தின் பேராலும் கேட்டுக் கொள்கின்றோம்.
இம் மூவரின் மரணதண்டனையை நிறுத்தக் கோரி தன் வாழ்வையே ஆகுதியாக்கி அர்ப்பணித்த செல்வி.செங்கொடியின் உயிர்த் தியாகத்தை நினைவு கூரும் வகையில் கனடாவில் உள்ள இதர தமிழ் அமைப்புக்களோடு இணைந்து ஒரு வணக்க அஞ்சலி நிகழ்வு கனேடியத் தமிழர் பேரவையின் தலைமைச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 30ம் திகதி, நடக்க ஏற்பாடாகியுள்ளது என்பதையும் அறியத் தருகின்றோம்.
இந்த வேளையில் செல்வி.செங்கொடியின் குடும்பத்தார் அனைவருக்கும் கனேடியத் தமிழர் பேரவை சார்பிலும், கனேடியத் தமிழர்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் ஏன அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மூவரது தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்க!- – பிரித்தானிய தமிழர் பேரவை
[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 10:13.13 AM GMT ]
இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுவை நிராகரித்திருப்பதை இந்திய குடியரசுத் தலைவர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை தயவாகக் கோரிக்கை விடுக்கின்றது.
இந்த மூவரும் தாங்கள் எந்த நேரமும் தூக்கில் இடப்படலாம் என்ற அச்ச உணர்வுடன், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் சொல்லொணா துயரங்களை அனுபவித்துள்ளனர்.
கருணை மனு நிராகரிக்க தாமதம் ஆகிய பல வழக்குகளை, குறித்த கைதிகள் ஏற்கனவே சிறையில் அனுபவித்திருக்கும் துன்பத்தைக் கருத்தில்கொண்டு இந்தியாவின் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை பல தடவைகள் மாற்றியிருக்கின்றது.
இந்தியா ஒரு வன்முறையற்ற கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட நாடு என்ற அடிப்படையிலும், மனிதாபிமான ரீதியிலும் இந்த மூவரது தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளுகின்றது.
இந்தியாவை விட மானிட அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள பல நாடுகள் இவ்வாறான தண்டனைகள் கொடூரமானவை என்பதை உணர்ந்துகொண்டு அவற்றை இல்லாது ஒழித்துள்ளன.
எனவே, பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களை மதிக்கும், உலகில் முன்னணி நாடாக வளர்ந்துவரும் இந்தியாவிற்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தூக்குத் தண்டனையை இந்தியா ரத்து செய்யும் என நாம் முழுமையாக நம்புகின்றோம்
நன்றி.
மூவரின் மரண தண்டனை குறித்து இந்திய ஜனாதிபதி கருணை காட்ட வேண்டும்!- மனோ கணேசன்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 09:58.12 AM GMT ]
 ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தொடர்பில் இந்திய ஜனாதிபதி கருணை காட்ட வேண்டும். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகம், இலங்கை மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து எழுந்துள்ள மக்கள் குரல்களுக்கு மதிப்பளித்து மரண தண்டனை என்ற சட்டபூர்வமான கொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் மன உணர்வுகளை இந்திய அரசாங்கத்திற்கு இலங்கையில் இருக்கின்ற இந்திய தூதுவர் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
வன்முறை செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். ஆனால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கும் மூவரும் உண்மையிலேயே குற்றம் புரிந்தவர்களா என்பது பற்றி பலத்த சந்தேகங்கள் இந்தியாவிலேயே எழுப்பப்பட்டுள்ளன.
ராஜிவ் படுகொலை தொடர்பில் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வர்மா ஆணைக்குழு செயற்படவில்லை. அதேபோல் ஜெயின் ஆணைக்குழு இடைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் பிரபல ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ண அய்யர், குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை நிரபராதியென அறிவித்துள்ளார்.
இந்த அடிப்படைகளிலேயே இந்திய அரசியல் தலைவர்கள் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோருகின்றார்கள். ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாகும். இது இலங்கை இனப்பிரச்சினை ஆயுத போராட்ட வடிவம் பெற்றமையுடன் நேரடி தொடர்பு கொண்டதாகும்.
அப்படுகொலைக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் செயற்பாடுகளுடன் அந்த படுகொலைக்கு தொடர்பு இருக்கின்றது. அதேபோல் இன்றுவரை இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டில் ராஜீவ் காந்தியின் படுகொலை செல்வாக்கு செலுத்தி வருகின்றது.
இந்த கொள்கை நிலைப்பாட்டின் பின்னணியிலேயே இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. இது வரலாறு ஆகும். எனவே மரண தண்டனை கைதிகள் விவகாரமும், இலங்கை இனப்பிரச்சினையுடன் தொடர்பு கொண்டதாகும்.
ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து அவரை கொலை செய்வதற்கு இலங்கையில் கொழும்பில் வைத்து 1987ம் ஆண்டு ஒரு முயற்சி நடைபெற்றது. அவரது பாதுகாப்பு அதிகாரியின் முயற்சியினால் பிரதமர் ராஜீவ் காந்தி அன்று பாதுகாக்கப்பட்டார்.
அந்த கொலை முயற்சியும் இலங்கை இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதாகும். எனவே இலங்கை இனப்பிரச்சினையுடன் தொடர்புகொண்ட ஆயுதப்போராட்டம், யுத்தம் ஆகியவை தொடர்பில் படுகொலை செய்தவர்களையெல்லாம் தூக்கில் போடவேண்டும் என்றால், பெருந்தொகையானோரை தூக்கில் போடவேண்டும்.
அந்த தகுதியுடைய நிறையபேர் இந்தியாவிலும், இலங்கையிலும் இருக்கின்றார்கள். எனவே இது வெறும் சட்டப்பிரச்சினை அல்ல. இதுதொடர்பில் இந்திய அரசாங்கம் அரசியல் ரீதியாக முடிவெடுக்க வேண்டும். அதற்கான வழி இந்திய அரசியல் சட்டப்படி இருக்கின்றது.
அதனால்தான் இந்த பிரச்சினை இன்று இந்திய நீதிமன்றங்களிலிருந்து, இந்திய ஜனாதிபதியிடம் சென்றுள்ளது. பொது மன்னிப்பை வழங்கி மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும். அதன் மூலமாக இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலே ஒரு சரியான சமிக்ஞையை இந்திய அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.

No comments:

Post a Comment