Monday, July 11, 2011

இந்தியத் தொலைக்காட்சி விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் சொதப்பி விட்டதால் நெருக்கடி

(வீடியோ இணைப்பு)
இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துடன் இணைந்து நடத்தப்பட்ட விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல பங்கேற்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இதன் காரணமாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் ஒன்றின் மீது ஒன்று குற்றம்சாட்டியுள்ளதுடன், முறுகலான நிலை ஒன்றும் ஏற்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் என்ற ஆவணப்படத்துடன் இணைந்ததாக நேரடி விவாத நிகழ்வு ஒன்றையும் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.

கடந்த 8ம் நாள் இரவு இடம்பெற்ற இந்த நேரலை விவாதத்தில் சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் பங்கேற்றிருந்தார்.

சென்னையில் இருந்து இந்த நிகழச்சி நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டது.

இந்த விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உரிய வகையில் பதிலளிக்கவில்லை என்றும் நிகழ்ச்சியில் எதிர்த்தரப்பில் எழுப்பப்பட்ட பல வாதங்களுக்கு அவர் பொருத்தமான பதில் கூறாமல் சொதப்பி விட்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேவேளை, இந்த நிகழ்ச்சி முழுவதுமே விடுதலைப் புலிகளுக்கு சார்பாகவே நடத்தப்பட்டதாகவும்,, நிகழ்ச்சியின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் கொடியும் கூட காண்பிக்கப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இராணுவப் பேச்சாளர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அது பக்கச்சார்பற்றது என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது சிறிலங்கா அரசின் தரப்பில் இழைக்கப்பட்ட மிகப்பெரிய தவறு என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இராணுவப் பேச்சாளரே பதிலளிக்க வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளே அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து முழுமையாக ஆராயாமல், இராணுவப் பேச்சாளரை இதில் பங்கேற்க வைப்பதற்காக சிறிலங்கா அதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்

நிகழ்ச்சியின் மைய நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், சிறிலங்கா அதிபரின் மூலம் இந்த நிகழ்ச்சியில் இராணுவப் பேச்சாளரை பங்கேற்க வைத்தது வெளிவிவகார அமைச்சு செய்த மிகவும் மோசமான முட்டாள்தனமான காரியம் என்றும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பிரித்தானியாவின் முன்ளாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் அபிசேக் பானு, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார், கேணல் ஹரிகரன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை ராகுல் கன்வால் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் நடந்திருந்தால், அனைத்துலக விசாரணைகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றே கருத்து வெளியிட்டிருந்ததாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
puthinappalakai





















11 Jul 2011

No comments:

Post a Comment