Thursday, July 7, 2011

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இறைபதம் அடைந்தார்

[ புதன்கிழமை, 06 யூலை 2011, 04:08.49 PM GMT ]
சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி  இன்று இரவு 8.20 அளவில் கொழும்பில் காலமானதாக அவரது வீட்டார் தெரிவித்தனர்.
அவரது இறுதிக் கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே சுகவீனம் உற்றிருந்த அவர், இருதயம் செயலிழந்த நிலையில் இன்று காலமானதாக கூறப்படுகிறது.
ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்..
பேராசிரியர் சிவத்தம்பி தொடர்பான மேலதிக தகவல்கள்
பெருந்தகை வாழ்நாள் பேராசிரியர்  கார்த்திகேசு சிவத்தம்பி 1932 ம் ஆண்டு மே மாதம் 10 திகதி யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்தார்.
இவர் தமது ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியிலும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இடைநிலை கல்வியையும் பெற்றார்.
இந்த கல்லுரியிலேயே அவர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையில் கல்வி கற்ற இவர் அங்கேயே தமது இளமானி மற்றும் முதுமானிப் பட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
பேராசிரியர்  கார்த்திகேசு சிவத்தம்பி இங்கிலாந்தின் உள்ள பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற முனைவர் பட்டம் பெற்றார்.
1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.
இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராகவும் சிவத்தம்பி பணியாற்றியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகம், ஒக்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க  பேக்லி பல்கலைக்கழகம், மற்றும் ஹாவட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் வருகைதரு போராசிரியராக சென்று ஆய்வுகளையும் விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
இன்றைய தமிழ் துறையிலேயே மிக மிக அதிகார அறிவினை பெற்ற தமிழ் அறிஞராக திகழ்ந்தார்.
கலைத்துறையை பொறுத்தவரையில் அவர் பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததுடன் பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.
பின்னர் தமிழ் நாடகங்களின் தோற்றம் பற்றி விரிவாக ஆராய்ந்து வெளியிட்ட இவர் கிரேக்க நாடகங்களின் தோற்றம் வரலாறு தொடர்பிலும் ஆராய்ந்து நூல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையர்கோன் எழுதியுள்ள ‘விதானைமார் வீட்டில்’ எனும் தொடர் நாடகத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பல்வேறு துறைகளிலும் ஆய்வு கட்டுரைகள், நூல்கள் உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியுள்ளார்.
இலங்கை தமிழ் தொடர்பில் சுமார் 70க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளதுடன், 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையில் இவரது படைப்புகள் உள்ளுரில் மாத்திரமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன.
அவரது ஆர்வம் தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, மற்றும் கவின்கலை போன்ற பல்வேறு துறைகளில் பரவியிருந்தது.
மாக்ஸிச சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாண சமூதாயத்தின் பல்வேறு குறைபாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
1963 ஆம் அண்டு வல்வெட்டித்துறை பிரபல தொழில் அதிபரான நடராசா என்பவரின் மூத்த புதல்வியான ரூபவதி என்பவரை விவாகம் செய்து திருமணபந்தத்தில் இணைந்தார்.
இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இவருடைய ஓய்வு காலத்திற்கு பின்னர் ஆரசியல் அபிப்பிராய ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவந்தார்.
அத்துடன் கடந்தவருடம் தமிழகத்தில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்று கொளரவமளிக்கப்பட்டார்.
இந்த நிலையிலேயே பேராசிரியர்  கார்த்திகேசு சிவத்தம்பி தனது 84வது வயதில் நேற்றிரவு 8.20 மணியளவில் காலமானார்.
பேரறிஞரின் இழப்பானது தமிழ் சமூகத்துக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது திண்ணம்.

No comments:

Post a Comment