Monday, July 25, 2011

நெதர்லாந்து செய்தியாளரையும் விட்டுவைக்காத வெள்ளை வான் !

25 July, 2011 by admin
செய்தி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணம் சென்ற இரண்டு வெளிநாட்டுச் செய்தியாளர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன், அவர்களுடைய உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இவர்கள் மீதான தாக்குலை நடத்தியுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. உலகளாவிய நெதர்லாந்து வானொலியின் (Radio Netherlands Worldwide) செய்தியாளர்களான ஒலிவியா மற்றும் பிலிப்ஸ் ஆகியோரே யாழ்ப்பாணத்தில் இவ்விதம் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு (Net working for rights in Sri Lanka) என்ற புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்களின் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு பத்திரிகையாளர்கள் உளவு பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அதன்பின்னர் நள்ளிரவில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்த சுமார் பத்து பொலிஸார் இவர்களை மீண்டும் விசாரணைக்குள்ளாக்கியதுடன், உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மறுநாள் காலையில் அவர்கள் வழமையான பாதையில் திரும்பிக்கொண்டிருந்தபோது, வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதக்குழு ஒன்றினால் அவர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களுடைய உடைமைகளும் கொள்ளையிடப்பட்டன. இருந்த போதிலும், குறிப்பிட்ட செய்தியாளர்களின் பாதுகாப்பைக் கருதி சம்பவம் நடைபெற்ற திகதியை வெளியிட நெதர்லாந்து வானொலியின் நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது, மனித உரிமை மீறல்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோ அடையாளங்காணப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படுவதோ இல்லை எனத் தெரிவித்திருக்கும் இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு, அதனால் இந்தச் சம்பவம் தொடர்பாகவும் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாதிருப்பதாகத் தெரிவித்துள்ளது. போர் முடிவுக்கு வந்து 26 மாதங்கள் சென்றுவிட்ட போதிலும், சுயாதீனமான ஊடகவியலாளர்கள் எவரும் போர் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டும் இவ்வமைப்பு, போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கின் கருத்துக்களின் அடிப்படையிலான செய்தி அறிக்கைகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளுர் செய்தியாளர்களும் அச்சம் காரணமாக இவ்வாறான செய்திகளைச் சேகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்குத் துணியவில்லை. இந்த நிலையில் நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சுயாதீனமான செய்தி சேகரித்தலை அனுமதிக்கத் தயாரில்லாத அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத்தான் பிரதிபலிக்கின்றது எனவும் இலங்கையில் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment