Sunday, June 19, 2011

வீசா காலாவதியான 26 பேரே பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூன் 2011, 02:48.16 AM GMT ]
வீசா காலாவதியாகி பிரிட்டனில் தங்கியிருந்தவர்களையே பிரிட்டன் அரசாங்கம் இலங்கைக்க திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நேற்று  முன்தினம் பிரிட்டன் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 26 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்களா என முதலில் நாம் பரிசோதனைகளை மேற்கொண்டோம்.
அந்தப் பரிசோதனைகளை அடுத்து அவர்கள் அனைவரும் இலங்கையர்களே என்பதை உறுதிசெய்து கொண்டோம். அத்துடன் அவர்களது இருப்பிடங்களையும் அடையாளம் கண்டுகொண்டுள்ளதுடன் அவர்களது விபரங்களையும் திரட்டினோம்.
இவ்வாறு பிரிட்டன் அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 26 பேரில் பெரும்பாலானோர் வீசா காலாவதியாகிய நிலையில் பிரிட்டனில் தங்கியிருந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு நாடு திரும்பியவர்களில் 14 தமிழர்கள் 8 முஸ்லிம்கள் உட்பட சிங்களவர்கள் சிலரும் காணப்பட்டனர்.
இவர்களது முழு விபரங்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்கள் விசாரணைகளை தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
இதேவேளை, அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கையர்கள் 26 பேரை பிரிட்டனிலிருந்து நாடு கடத்தியமை நியாயமானது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சமும் ஏற்படாது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதா? என வினவியபோது இதற்குப் பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா இது தொடர்பாக எந்தவொரு கருத்தினையும் தன்னால் வெளியிட முடியாது எனக் கூறினார்.
தமது நாட்டுச் சட்டதிடங்களுக்கு ஏற்ப பிரிட்டன் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதை அநீதி என்றோ அல்லது நியாயமற்றது என்றோ என்னால் ஒன்றும் கூற முடியாது. நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்களுக்கான வீசாவில் பிரித்தானியாவிற்குச் சென்று வீசா காலாவதியான பின்னரும் அங்கு தங்கியிருக்க முயற்சித்தவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment