Sunday, May 29, 2011

ரஜனியைக் காணாமல் துடித்தார் கமல்!

திரையில்தான் அவர்கள் இருவரும் போட்டியாளர்கள். நிஜத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகளைத் தாண்டிய நண்பர்கள். தமிழ் சினிமாவின் இரு பெரும் சிகரங்கள்.

இந்திய சினிமாவுக்கு புதிய கவுரவம் தந்த சாதனையாளர்கள். பெயர்களைச் சொல்வதில் கூட இவர்களை பிரித்து உச்சரிக்க முடியாது... இவர் பெயரைச் சொன்னால், கூடவே அவர் பெயரும் தன்னிச்சையாக வரும்... அந்தப் பெயர்கள் ரஜினி - கமல்!

கடந்த ஒரு மாத காலமாக ரஜினி மருத்துவனையில் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார். அவரைக் காண அத்தனை விவிஐபிக்களும் காத்திருக்கிறார்கள்.

ஆனால் அனுமதிதான் கிடைத்தபாடில்லை. வெளியிலிருந்து நோய்க் கிருமிகள் ரஜினியைத் தாக்கக் கூடும் என்பதால் சிறப்பு வார்டில் அவர் வைக்கப்பட்டிருந்தார். மனைவி, மகள்கள், மருமகன் தவிர வேறு யாரும் ரஜினியைப் பார்க்க முடியவில்லை.

ஒரு காலத்தில் ரஜினியின் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக இருந்து, பின்னர் ரஜினி வழியில் நடிகராகி, இன்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ள விஜயகாந்த் கூட ரஜினியை நேரில் சந்திக்க முடியாத நிலை.

ஐசியுவிலிருந்த ரஜினியை கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு வந்து, "அண்ணன் ரஜினி நலமுடன் இருக்கிறார். திரும்ப பழையபடி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்று உருக்கத்துடன் கூறினார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரால் ரஜினியை பார்க்கக் கூட முடியவில்லை. எனவே அவர் ராகவேந்திரர் கோயிலில் ரஜினிக்காக பிரார்த்தனை செய்து, மக்களுக்கு தன் கையால் அன்னதானம் செய்தார்.

"இன்றைய சினிமாவில் அனைவருமே ரஜினிக்கு ரசிகர்கள்தான். பிறகுதான் நடிகர்கள். எங்கள் அன்புக்குரிய ரஜினி விரைந்து நலம்பெற்று வரவேண்டும்," என்றார்.

இவர்கள் இப்படியெல்லாம் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் எழுப்பிய கேள்வி, "கமல் சார் ஏன் இன்னும் பார்க்கவில்லை. அவரை விட உரிமையுள்ளவர் யார் இருக்கிறார்கள்...?" என்றே கேட்டு வந்தனர்.

உண்மையில் ரஜினியைக் காண மூன்றுமுறை கமல் முயற்சித்துள்ளார். ஆனால் அவர் ஒவ்வொரு முறை பார்க்க முயன்றபோதும், ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லது டயாலிஸிஸ் சிகிச்சையில் இருந்ததால், பார்க்க முடியவில்லையாம்.

ரஜினியைப் பார்த்தாக வேண்டும் என லதா மற்றும் ஐஸ்வர்யாவிடம் அவர் சார்பில் கேட்கப்பட்டபோது, இப்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைள் காரணமாக நாங்களே அவரைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. எனவே மருத்துவர்கள் அனுமதி அளித்ததும் உங்களுக்கு உடனே சொல்கிறோம்," என்று மிகுந்த தயக்கத்துடன் கூறியுள்ளனர்.

'பக்கத்திலிருந்தும் என் நண்பன் ரஜினியைப் பார்க்க முடியவில்லையே... அவரைச் சந்திக்கும் சூழலை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுங்கள்', என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் கலைஞானி.

கமல் 50 என்ற பெயரில் விஜய் டிவி விழா கொண்டாடியபோது, முதல் ஆளாய் அதில் கலந்து கொண்டு கடைசி ஆளாய் வெளியேறி நட்புக்கு மரியாதை செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

விழாவில் தன்னைப் பற்றி ரஜினி பேசியதைக் கேட்டு கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்ட கமல், அவரைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டார். "எவன் சொல்வான் இந்த மாதிரியெல்லாம்... ரஜினி என் உண்மையான நண்பன்... பெருந்தன்மைக்கு சொந்தக்காரர்" என்றெல்லாம் கமல் புகழ்ந்தது நினைவிருக்கலாம்.

 

No comments:

Post a Comment