Tuesday, May 17, 2011

கைப்பிள்ளை சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது!!

Tuesday, May 17, 2011
தேர்தலில் ஜெயித்து விட்டதால் என்னை அடிக்க அலைவது என்ன நியாயம்?-வடிவேலு
தேர்தலில் ஜெயித்து விட்டால் மக்களுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து யோசிக்க வேண்டும். அதுதான் நல்ல தலைவருக்கு அடையாளம். ஆனால் தேர்தலில் ஜெயித்து விட்டதால் என்னையும், எனது குடும்பத்தினரையும் அடிக்க அலைவது என்ன நியாயம். இனிமேலாவது விஜயகாந்த் நல்ல தலைவராக நடக்க முயற்சிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார் வடிவேலு. அப்போது அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை குறிப்பிட்டு கடுமையாக பிரசாரம் செய்தார். அவரை மிகக் கடுமையாகவும் விமர்சித்தார். இதனால் தேமுதிகவினர் வெகுண்டனர். இருப்பினும் தேர்தல் சமயத்தில் பிரச்சினையை வளர்க்க விரும்பாமல் அவர்களை அமைதி காக்கச் செய்தார் விஜயகாந்த்.

ஆனால் தற்போது தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தேமுதிகவின் தயவு தேவைப்படாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை அதிமுக பெற்றுள்ளது.

இந்த நிலையில் தேமுதிகவினர் வடிவேலுவைப் பழிவாங்கும் வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. அவரை வீட்டைத தாக்குவதற்காக சென்னையில் உள்ள வடிவேலுவின் வீட்டுக்கு உருட்டுக் கட்டைகளுடன் பல தேமுதிகவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது வடிவேலு பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.

மதுரையிலும் தேமுதிகவினர் அவரது வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து மிரட்டுவதாக வடிவேலு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பாதுகாப்பு கோரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் உள்ள தனது வீட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுகவை வைத்துத்தான் விஜயகாந்த் ஜெயித்தார்

தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை.

ஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள்.

வெளில வாடா, எத்தனை நாளைக்குடா உனக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் என்று பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றார், உனக்கு மக்கள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. ஆனால் அது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். என் வீட்டில் புகுந்து அடிப்பதற்கோ, என்னை வெட்டுவதற்கோ, என் வீட்டாரை தாக்குவதற்கோ அவர்கள் தீர்ப்பு கொடுக்கவில்லை. அது தப்பான விஷயம்.

தேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்?

அவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு விஜயகாந்த்தான் முழுப் பொறுப்பும்.

எனது வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்புக்கு இருந்தவர்கள் போய் விட்டார்கள். எனது சென்னை வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து மிரடடியுள்ளனர். எனவே எனக்கும், எனது வீட்டாருக்கும் போலீஸார் உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வடிவேலு.

No comments:

Post a Comment