Friday, April 29, 2011

நமது அடிமை மோகத்துக்கு தீனி போட்ட ஆங்கிலநாட்டின் வருங்கால அரசருக்கு இன்று திருமணம்,அடிமைகளான எங்களுக்கும் வாழ்த்தும் உரிமை உண்டு!!

இளவரசர் வில்லியமுக்கு இன்று திருமணம்


பிரிட்டன் இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் திருமணம் லண்டனில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அரச குடும்பத்தின் திருமணத்தை முன்னிட்டு லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 அரச குடும்பத்துக்கும், சர்வதேச பிரபலங்கள் பலருக்கும் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் லண்டனுக்கு வரத் தொடங்கி விட்டனர். பத்திரிகையாளர்களும், பத்திரிகை புகைப்படக்காரர்களும் ஏராளமானோர் வந்து குவிந்துள்ளனர்.
இதற்கு முன் வில்லியமின் பெற்றோர் சார்லஸ் – டயானா திருமணத்தை சுமார் 75 கோடி பேர் டி.வி.யில் பார்த்தனர். வில்லியமின் திருமணத்தை இதனைவிட அதிகமானோர் டி.வி.யில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் (லண்டனில் காலை 11 மணி) கிறிஸ்தவ முறைப்படி வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து விருந்து நிகழ்ச்சி நடைபெறும்.
இளவரசர் வில்லியமுக்கு வயது 28. கேட் மிடில்டனின் வயது 29.
ஸ்கை நியூஸ், பிபிசி, குளோபல் நியூஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டன் ராணி எலிசபெத் முறைப்படி தொடங்கி வைப்பார்.
இது காதல் திருமணமாகும். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் நடைபெறும் நாளில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் லண்டனுக்கு கூடுதலாக வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லண்டனில் வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
மணமகளுக்கு இலங்கையின் பரிசு: திருமணத்தின் போது மணமகள் கேட் மிடில்டன் அணிவதற்காக நீலக்கல் பதிக்கப்பட்ட “ஹேர் பின்னை’ இலங்கை பரிசாக அளித்துள்ளது. இலங்கை அரசு நிறுவனமான ஸ்ரீலங்கா நவரத்தினம், நகைகள் அமைப்பு இதனை வழங்கியுள்ளது. முன்னதாக 1981-ஆம் ஆண்டில் டயானாவின் திருமணத்தின் போது இலங்கை அரசு அவருக்கு நீலக்கல் மோதிரத்தை அளித்தது. அதன் பின் அதேபோன்ற நீலக்கல் மோதிரத்தின் விற்பனை உச்சத்தை எட்டியது. இதையடுத்து இப்போதும் பிரிட்டன் அரச குடும்ப திருமணத்துக்கு பரிசளித்துள்ளது இலங்கை.
திருமணத்தை முன்னிட்டு லண்டனில் உள்ள தெருக்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரபல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒபாமாவுக்கு அழைப்பு இல்லை: திருமணத்துக்காக உலகம் முழுவதும் சுமார் 1,900 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: இந்த திருமணத்துக்காக பெருமளவில் பணம் வீணடிக்கப்படுவதாக பிரிட்டனில் எதிர்க்கட்சியான உள்ள குடியரசுக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. திருமணத்தை முன்னிட்டு மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. ஆடம்பரமாக பெருமளவில் பணம் செலவிடப்படுகிறது என்று குடியரசுக் கட்சி கூறியுள்ளது.

No comments:

Post a Comment