Friday, April 8, 2011

தமிழகம் கேட்குமா!!

தவறை யார் செய்தாலும் தட்டிக்கேட்போமே!
அன்று எலி யானையை துரத்தியதாக மார்தட்டி,இரக்கமற்ற படுகொலைகளும் புரிந்ததால் நாதியற்றுப்போனது ஈழத்தமிழினம்!ஆணவம் கொண்டு ஆடிய அவ்வினம் கடந்த அழிவினால் ஆடிப்போயுள்ளது.எல்லோரையும் எதிரி என்கின்றது,பல நாடுகள் சேர்ந்து பழிவாங்கியதாக பகுத்தறியாது புலம்பி,ஆதிக்கவெறியரான அமெரிக்கா,ஐரோப்பியர்களிடம் கையேந்தி இருக்கும் மானத்தையும் ஏலமிடுகின்றது.அமெரிக்காவின் கூலிகளை அமைச்சவை அமைக்கவும் தமிழனை அடிமையாக்கவும் தமிழனே இன்று தன்னை தாரைவார்த்துள்ளான்.இவன் அறிவிலியா?நண்பனை,உறவுகளை எதிரிகளாக்கிய இவன் மீண்டும் மீண்டும் தன்னை தலைவனாக எண்ணியே தமிழர் தலையை எடுக்கின்றான்.புரிந்துகொண்டால் தப்பிக்கலாம்.இப்போது நண்பனிடம் பழையவற்றுக்கு  மன்னிப்பு கேட்டு தப்பிக்கப்போகிறானா அல்லது அந்நிய எதிரியிடம் அகதியானது போலவே மீண்டும் அடிமைச்சாசனம் எழுதப்போகிரானா??
நண்பா!உன் எதிரிதான் இறந்துவிட்டானே!மேலும் தமிழனை எதற்காக கொள்கிறாய்,சாவுக்கு துணை போகிறாய்??நாம் செய்தது போலவே நீயும் தவறுகள்தானே அன்று செய்தாய்,காக்க வந்தவன் காவு கொண்டாயே!!எதிரியின் சூழ்ச்சியில் நீயுமல்லவா சிக்கினாய்,அவமானமும் பட்டாய்.அறிவற்ற நாமும் உன்னை அடித்து வீழ்த்தியதாக எண்ணி புகழுரைத்தே,உன்னை இழிவாக்கியே கர்வத்தாலழிந்தோம்.நேசம் உந்தன் சொத்தல்லவா?பாசக்காரனான நீ பழிகாரனாக ஆனதுதான் ஏன்??போதும் உந்தன் இரட்டை வேடம்!உன்னினத்தில் ஒன்று நாமல்லவா,நன்றி கொன்ற எம்மை மன்னித்து நண்பனாய் ஆகுவாயா??

Uruthrakumaar:இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் உங்கள் தொப்புள்கொடி உறவுகளாக வாழும் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது இன்றைய நிலையினை உங்களின் கவனத்துக்கு எடுத்து வரவே இம் மடலை வரைகின்றோம். ’தானாட மறந்தாலும் தசையாட மறக்காது’ என்பார்கள். உங்களைத்தவிர நமது மக்களின் சோகத்தையும் அவலத்தையும் நாம் யார்க்கெடுத்துரைப்போம்?
நேசத்துக்குரிய தமிழக மக்களே!
நாகரீக உலகை அதிரச் செய்த பெரும் இனப்படுகொலைக்கு ஈழத் தமிழ் மக்கள் ஆளாகியதை நீங்கள் நன்கறிவீர்கள். இந்த இனப்படுகொலையின் இறுதிக்கட்டத்தில் 80,000 க்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னாலேயே சிங்களத்தால் கொல்லப்பட்டார்கள். வீதிகளில், வீடுகளில், பள்ளிக்கூடங்களில், வழிபாட்டுத்தலங்களில், மருத்துவமனைகளில், திருமணவீடுகளில், இழவுச் சடங்குகளில் எங்கும் நமது மக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டார்கள். நடக்கும்போது கொல்லப்பட்டார்கள். படிக்கும்போது கொல்லப்பட்டார்கள். உண்ணும்போது கொல்லப்பட்டார்கள். உறங்கும்போது போது கொல்லப்பட்டார்கள். கூடும்போதும் கொல்லப்பட்டார்கள். ஓடும் போதும் கொல்லப்பட்டார்கள். இயற்கை கழிக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். இயலாது இருக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். குப்பை கூளங்களைக் கூட்டித் தள்ளி ஒரு மூலைக்குள் வைத்துத் தீயிட்டுக்; கொழுத்துவதைப்போல – மூட்டைப்பூச்சிகைள தட்டிக் கொட்டி ஒருங்கு சேர்த்து காலால் நசுக்குவதைப்போல - நமது மக்களை அடித்துத் கலைத்து விரட்டிச் சென்று கடற்கரையோரத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் வைத்து நரபலி எடுத்தது சிங்களம்.
அதுவும் 21 ஆம் நூற்றாண்டில், நவீன ஊடக உலகம் 24 மணிநேரமும் விழிமூடாது பார்த்திருக்கும் காலத்தில், உலகின் 600 கோடி மக்களின் கண்களின் முன்னால், இந்திய உபகண்டத்தில் தமிழகத்துக்கு அருகாமையில் இப் பெரும் இனப்படுகொலையில் இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அண்டையில், ஜனநாயகப் பாரம்பரியம் கொண்ட 120 கோடி மக்களின் முன்னால் இக் கோரதாண்டவத்தை ஆட சிங்களத்தால் முடிந்திருக்கிறது.
இது இராணுவ உத்தியின் வெற்றி அல்ல. சிங்கள வீரத்தின் வெற்றியுமல்ல. இனப்படுகொலையின் வெற்றி. மக்களைத் தங்குதடையின்றி, மிகப் பெரும் தொகையில் கொன்று குவிக்க முடிந்தமையின் வெற்றி. எந்த அரசு இந்த மக்களைத் தமது சொந்த மக்கள் என்று உரிமை கொண்டாடியதோ அந்த அரசே அந்த நிராயுதபாணியான மக்களை எறிகணைகளாலும், போர் விமானங்களாலும், யுத்த டாங்கிகளாலும் கொன்று குவித்துப் பெற்ற வெற்றி. இப்படியான அபகீர்த்தி உடைய ஒரு வெற்றியைத்தான் தமது வரலாற்றுப் பெரும் வெற்றியென மீசை முறுக்குகிறது சிங்களம்.
இராணுவ அர்த்தத்தில் இது ஒரு கோழைத்தனம்  என்றாலும் கூட அரசியல் இராஜதந்திர அர்த்தத்தில் சிங்களம் வெற்றி பெற்றிருக்கிறது. உண்மையில் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்தது சிங்களமும் சீனாவும்தான். தோல்வியடைந்தது இந்தியாவும் ஈழத் தமிழர்களும். தொப்புள் கொடி உறவுகளான இந்திய மக்களையும் ஈழத் தமிழர்களையும் பிரிப்பதில் சிங்களத் தலைவர்களும் இராஜதந்திரிகளும் வெற்றி பெற்றுள்ளனர். இது நம்மிரு தரப்பினருக்கும் பெரும் இழப்பாகும். இந்த இழப்புக்கள் நடந்து முடிந்தவை மட்டுமல்ல, எமது உறவு ஒட்டப்படாவிட்டால் இனியும் தொடர்ந்து நடக்கக்கூடியவையும்கூட.
இனி இந்த உறவை ஒட்டப்போவது யார் என்பதே இப்போதய கேள்வி. இப் பணி முதலில் தமிழக மக்களையும் அடுத்து இந்திய மக்களையும் தலைவர்;களையும் இராஜதந்திரிகளையும் சாரும். இதற்கான தொடக்கப் புள்ளியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் இவ் வேண்டுதலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த காலத்தை ஒரு தடவை திருப்பிப் பார்ப்போம். இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது ஈழத் தமிழர் தேசம் பெருந்துயரில் ஆழ்ந்து போனது. மக்கள் தாமாகவே வீடுகளெங்கும், வீதிகளெங்கும் கறுப்புக் கொடிகளும் கண்ணீருமாக தமது வணக்கத்தை செலுத்தி நின்றார்கள். இதேபோல் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் மறைவின் போதும் ஈழத் தமிழர் தேசமே பெருந்துயரில் தோய்ந்து போனது. காந்தி, நேரு போன்ற இந்தியப் பெரும் தலைவர்களின் படங்கள் ஈழத் தமிழர் வீடுகளில் மாட்டப்பட்டிருந்த காலம் நம் கண் முன்னாலேயே இருந்தது. இப்படியாக இந்திய மக்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் இடையே பாரம்பரிய நட்புறவு இருந்து வந்தமையினை நாமெல்லோரும் அறிவோம்.
இத்தகையதொரு உறவில் விரிசல் வந்தமை தற்செயலானதல்ல. சிங்கள இராஜதந்திரத்தின் வலைக்குள் இந்தியாவும் ஈழத்தமிழர்களும் சிக்குண்டு பாரிய தோல்விக்கும் பெருந்துயருக்கும் உள்ளாகியிருக்கிறோம். இந்த இராஜதந்திரவலைக்குள் இரு தரப்பினரையும் முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான் இழுத்தி வீழ்த்தி சிக்குண்ட வைத்தார் என்பது ஒரு கசப்பான வரலாற்;றுப் பேருண்மையாகும்.
2400 ஆண்டுக்கு மேலாக சாணக்கிய இராஜதந்திர பாரம்பரியம் கொண்ட இந்திய இராஜதந்திரமும், தொன்மையும் செழிப்பும் மிக்க தமிழ் நாகரிகமும் இங்கு தோல்வி கண்டன. இதனை இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் டிக்சித் தனது Assignment Colombo எனும் நூலில் ஒப்புக் கொள்கிறார். ஜே. ஆர் தம்மை ஏமாற்றிவிட்டார் எனக் கூறும் டிக்சித், பைபிளில் வரும் ’நான் பெரும் பாவி’ எனும் அர்த்தத்தைத் தரக்கூடிய லத்தின் சொல்லாகிய ’Mea Culpa’ எனும் பாவமன்னிப்புக் கோரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தமது தோல்வியை ஒப்புக்கொள்கிறார். இதுவே பிற்காலத்தில் நம் இரு தரப்புகளும் கண்ட தோல்விகளுக்கு அடிப்படையானதாக அமைந்தது.
இது மட்டுமன்றி, சிங்களம் இந்தியாவை எப்போதும் தனக்கு அச்சுறுத்தலாகத்தான் நோக்குகிறது. தமிழர்களை இந்திய விரிவாக்கத்தின் குறியீடாகத்தான் பார்க்கிறது. இந்தியாவிலிருந்து காலத்துக்கு காலம் படையெடுப்புகளும் பண்பாட்டு விரிவாக்கமும் ஏற்பட்டு வந்த பின்னணியில் சிங்களவர்களிடம் இந்திய எதிர்ப்புவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்நிலையில் தமிழர்களை இந்திய ஆதிக்க விஸ்தரிப்பின் கருவிகளாக நோக்கும் மனநிலையினை சிங்களவர்கள் கொண்டுள்ளனர். இத்தகைய பண்டைய சிந்தனையைக் கொண்ட மகாவம்ச இதிகாச மயக்கத்தினுள் சிங்களம் தோய்ந்து போயுள்ளது. இம் மனப்பாங்கைக் கொண்ட சிங்கள இனம் தமிழர்களுக்கு எதிராகத் தொடுத்த போரை உண்மையில் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் எதிராக நடாத்திய போராக தமிழ் ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர். ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவின் பெயராலேயே சிங்கள ஆட்சியாளர்களால் கொன்று குவிக்கப்பட்டும் சிறுமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர் என்ற கருத்து ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியதொன்று.
இன்று ஈழத்தமிழ் மண் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பகுதியாகவே உள்ளது. அது இராணுவத்தினருக்குப் போகபூமியாகவும் தமிழ் மக்களுக்கு நரகபூமியாகவுமே காட்சியளிக்கிறது. இராணுவத்தினர், கடற்படையினர், காவற்துறையினர், துணைப்படையினர் எனத் தமிழ் மண்ணில் நிலை கொண்டுள்ள ஆயுதப்படையினரின் தொகையை மொத்தத் தமிழ் குடும்பங்களின் தொகையால் வகுத்தால் ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆயுதப்படையினன் என்ற வீதத்தில் ஈழத் தமிழ்மண் மொத்த இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை பச்சையாகப் புலப்படும். எந்நேரத்திலும் இராணுவத்தால் மக்கள் இம்சைப்படுத்தக்கூடியவகையிலான இராணுவ ஆட்சியே அங்கு நிலவுகிறது. இன்னும் சில வருடங்கள் தாமதித்தால் இலங்கைத்தீவில் முழுத் தமிழ் மண்ணும் சிங்களமயப்பட்டுவிடும் ஆபத்து துல்லியமாக உள்ளது. அவ்வாறு ஈழத் தமிழ் மண் சிங்களமயமாகி விட்டால் இலங்கைத்தீவு முழுமையாக தமிழக, இந்திய எதிரி நாடுகளின் கொல்லைப்புறமாக மாறிவிடும் ஆபத்தும் அதேயளவு துல்லியமானதாக உள்ளது.
அன்புக்குரியவர்களே!
உலகில் ஒரு மக்கள் கூட்டம் சுதந்திரமாக வாழ்வதா அல்லது அடிமைகளாக வாழ்வதா என்பதை உள்நாட்டு நிலைமைகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. உலக அரசுகள் அதுவும் சக்தி மிக்க அரசுகள் ஒரு பிரச்சினையில் எடுக்கும் முடிவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானித்து விடுகின்றன. ஈழத் தமிழ் மக்களாகிய நாம் இன்று சிங்களத்திடம் தோல்வியடைந்து சிறுமைப்படுவதற்கும் உலக அரசுகள் எடுத்த முடிவுகளே முக்கிய காரணம். இது ஈழத் தழிழ் மக்களின் தோல்வி மட்டுமல்ல தமிழக மக்களின் தோல்வியும்கூடத்தான் என்பதனையும் உங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம்.
இதனால் இந்நிலையினை மாற்றியமைத்து இந்தியா உட்பட உலக அரசுகளின் ஆதரவினை நமது பக்கம் வென்றெடுப்பதனைத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் முக்கியமானது என நாம் கருதுகிறோம். அதேவேளை சுயநலன்கள் என்ற அச்சில் சுழலும் இன்றைய உலக ஒழுங்கில் நியாய தர்மங்களை விட உலக அரசுகளின் நலன்களே வரலாற்றுச் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருக்கின்றன என்பதனையும் நாம் நன்கு அறிவோம்.
உலக அரசுகளை நம் பக்கம் வென்றெடுப்பதற்கு தமிழக மக்களின் முதன்மைப் பாத்திரம் இன்றியமையாதது என்பதனை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இதேவேளை உள்நாட்டு நிலைமைகள் ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்தனையும் நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.
இத்தகைய ஒரு சூழலில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் தமிழகத்துக்கு மிக முக்கிமான பங்கு உண்டு. ஈழத் தமிழர் தேசத்தை விழுங்கி விடத் துடிக்கும் சிங்கள இனவாதப்பூதத்திடம் இருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தமிழக மக்களிடத்தில், தமிழக அரசியற் தலைவர்களிடம் உள்ளது என்பதனயும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
சுதந்திரத் தமிழீழம் என்ற தனியரசு இலங்கைத்தீவில் அமைக்கப்படுவதே ஈழத் தமிழ், தமிழக, மற்றும் இந்திய மக்களது நலன்களை ஒரேநேர்கோட்டில் சந்திக்க வைக்கக்கூடியது என்பதனையும் உறுதியாக வெளிப்படுத்த விரும்புகிறோம்.
இத்தகையதொரு வரலாற்றுச் சூழலில், இன்றைய தேர்தல் காலத்தில் நாம் சில வேண்டுதல்களை முன்வைக்கிறோம். எம்மால் முன்வைக்கப்பட்டிருக்கும் பின்வரும் கோரிக்கைகளுக்கு தமிழகக் கட்சிகளும் மக்களும் ஆதரவு வழங்க வேண்டுமென மனதார வேண்டிக் கொள்கிறோம்.
ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழீழத் தனியரசே தீர்வாக அமைய முடியும் என்பதனை வலியுறுத்தியும் தமிழீழத் தனியரசினை அங்கீகரித்தும் தற்போதைய தேர்தலில் தெரிவு செய்யப்படும் தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்தல்.
சிறிலங்கா அரசின் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசினை வலியுறுத்தும் வகையில் தமிழகச் சட்டசபையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றச் செய்தல்.
சுதந்திரத் தமிழீழ அரசினை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில் இந்திய அரசிடம் முன்வைத்து அதனை வென்றெடுப்பதற்காகச் செயற்படல்.
தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வு உறுதிப்படுத்தப்படுவதுடன் இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் ஈழத் தமிழ் மக்களுக்கும் வழங்கப்படுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி தமிழக மற்றும் இந்தியச் சிறைக்கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைத்திருக்கப்படும் தமிழர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கு மாநில, மத்திய அரசுகளைத் தூண்டுதல்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளக்கட்டியெழுப்பப் படுவதற்குத் தேவையான உதவிகள் மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசின் ஊடாகவும் மற்றும் ஏனைய அனைத்துலக நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுத்தல்.
துயர் தோய்ந்த எமது ஈழத் தமிழர் பிரச்சினையினை தேர்தற்களத்தில் முதன்மைப்படுத்துவதன் மூலம் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பான கௌரவமான வாழ்வுக்கு தோள்கொடுப்பீர்கள் என்ற மேலான நம்பிக்கையுடன் தங்களின் மேலான கவனத்துக்கு இதனைப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றோம்.

No comments:

Post a Comment