Tuesday, April 26, 2011

சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கோடி சொத்து: ஆதரவற்ற சிறுவன் அடுத்த சாய்பாபா?:

ஆன்மிக வள்ளல் என்று உலகமே புகழும் ஸ்ரீசத்ய சாய்பாபா கடந்த 70 ஆண்டுகளாக செய்த சித்தாடல்கள் ஏராளம். அவர் கையை ஒரு சுழற்று சுழற்றினால் கைக்கடிகாரம், மோதிரம், பூ இனிப்பு என்று வந்தன. அவற்றை பெற்றவர்கள் வாழ்வில் பிரச்சினைகள் தீர்ந்தன.

சாய்பாபா முன்பு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு சென்றாலே மனம் அமைதியாகி, பிரச்சினைகள் தீர்ந்து விடுவதாக லட்சக்கணக்கானோர் கூறினார்கள். இதன் காரணமாகத்தான் சாய்பாபாவிடம் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக திரண்டது.


அதை வைத்து 1972-ம் ஆண்டு ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளையை சாய்பாபா தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் தலைவராக சாய்பாபா இருந்தார். செயலாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்ரவர்த்தி உள்ளார். அறக்கட்டளை உறுப்பினர்களாக மும்பை தொழில் அதிபர் இந்துலால் ஷா, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி, டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன், சத்யசாய் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.வி.கிரி, சாய்பாபாவின் இளைய சசோதரர் ஜானகிராமின் மகன் ரத்னாகர் ஆகியோர் உள்ளனர்.

சாய்பாபா அறக்கட்டளைக்கு வருமான வரி தாக்கல் ஆவணத்தின்படி புட்டபர்த்தியில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்புப்படி ரூ.40 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் சுமார் 180 நாடுகளில் சாய்பாபா அறக்கட்டளை நடத்தி வரும் பள்ளிகள், ஆசிரமங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் வருவாய், சொத்துக்களை கணக்கிட்டால் அது ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த சொத்து தகவல்களை தொகுக்கும் பணி நடந்து வருகிறது. அறக்கட்டளையை நிறுவிய சாய்பாபாபா தனது சமூக சேவையை தன் ஊரில் இருந்தே தொடங்கினார். புட்டபர்த்தியை எல்லா வசதிகளும் கொண்ட நகரமாக மாற்றினார். தனக்கு வந்த நன்கொடை பணத்தையெல்லாம் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சேவை பணிகளுக்கு வாரி, வாரி வழங்கினார்.

ஐசக் டைகுரட் என்ற அமெரிக்க நாட்டுக்காரர் 1991-ம் ஆண்டு சாய்பாபா அறக்கட்டளைக்கு 300 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். அந்த பணத்தை கொண்டு புட்டபர்த்தியில் 10 மாதத்தில் உலக புகழ் பெற்ற ஸ்ரீசத்யசாய் மருத்துவமனையை உருவாக்கினார். 360 படுக்கைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட அந்த மருத்துவமனையில் இன்றுவரை அனைவருக்கும் இலவசமாக எல்லாவித சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதுபோல பெங்களூரில் ரூ.500 கோடி மதிப்பில் மற்றொரு நவீன மருத்துவ மனையை கட்டினார். புட்டபர்த்தியில் மருத்துவமனை தவிர பல்கலைக்கழகம், உலக ஆன்மீக மியூசியம், அறிவியல் கோளரங்கம், ரெயில் நிலையம், விளையாட்டு ஸ்டேடியம், இசை கல்லூரி, விமான நிலையம், உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு வளாகம் போன்றவை சாய்பாபா ஆசீர்வாதத்தால் கட்டப்பட்டன.

இவை தவிர நாடெங்கும் 1200-க்கும் மேற்பட்ட சத்யசாய் வழிபாட்டு மையங்கள் உள்ளன. சுமார் 180 நாடுகளில் கல்வி, கலாச்சார மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 .5 லட்சம் கோடி வரை இருக்கும் என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால் 5 லட்சம் கோடியை தாண்டும் அளவுக்கு சொத்துக்கள் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

ஆதரவற்ற சிறுவன் அடுத்த சாய்பாபா?:
புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா தன்னை சீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று 1940-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி அறிவித்தார். முதலில் இதை யாரும் நம்பவில்லை.

1940-ல் இருந்து 1950-க்குள் சாய்பாபா நிகழ்த்தி காட்டிய அதிசய அற்புதங்களால் மக்கள் அவரை சீரடி சாய்பாபாவின் மறுஅவதாரம் என்று நம்பத் தொடங்கினார்கள். சீரடி சாய்பாபா அருள் பெற்றவர்களும் சாய்பாபாவின் மறு அவதாரம் இவர்தான் என்று கூறினார்கள்.

சீரடி சாய்பாபா தன் இறுதி நாட்களில் மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து சென்னை மாகாணத்தில் மறுபிறப்பு எடுப்பேன் என்று அறிவித்திருந்தார். 1918-ம் ஆண்டு சீரடி சாய்பாபா முக்தி அடைந்தார். அவர் கூறியபடி சரியாக 8 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் (தற்போது ஆந்திரா) உள்ள ஆனந்தபூர் மாவட்டத்தில் கோலப்பள்ளி என்ற ஊரில் சாய்பாபா பிறந்தார்.

சிறு வயதிலேயே தன் ஆத்மா கடந்த பிறவியில் சீரடி சாய்பாபா உடலில் இருந்ததாக கூறினார். அதோடு சீரடி சாய்பாபா செய்த அற்புதங்களை மிகச்சரியாக கூறி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார். சீரடி சாய்பாபாவுடன் நெருங்கிப் பழகியவர்கள் சாய்பாபாவை நேரில் பார்த்து பரிசோதித்து இவர் சீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று உறுதிப்படுத்தினார்கள்.

பலதடவை தன் அவதார நோக்கத்தை சாய்பாபா விளக்கமாக கூறியுள்ளார். 1963-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி குரு பூர்ணிமா தினத்தன்று பக்தர்கள் மத்தியில் உரையாற்றிய சாய்பாபா, தன் அவதாரம் பற்றிய மிக முக்கியமான ரகசியங்களை வெளியிட்டார்.

சாய்பாபா என்பது 3 அவதாரங்களை கொண்டது. சிவசக்தி கோட்பாட்டில் இது 3 அம்சங்களை கொண்டது. அதன்படி சிவனை பிரதிபலிக்கும் வகையில் சீரடி சாய்பாபா திகழ்ந்தார். சிவ-சக்தி வடிவமாக தான் (சாய்பாபா) திகழ்வதாக கூறிய சாய்பாபா, அடுத்து பார்வதி சக்தியை பிரதிபலிக்கும் வகையில் சாய்பாபாவின் 3-வது அவதாரம் இருக்கும் என்றார்.

3-வது அவதாரத்தின் பெயர் பிரேமாசாய் என்று பிரபலமாகும் என்றும் சாய்பாபா கூறினார். பிரேமாசாய் தற்போது கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறப்பார் என்றும் சாய்பாபா கூறி இருந்தார். பிரேமாசாய் தற்போது பிறந்து விட்டதாகவும், உரிய வயதில் சாய்பாபா அவதாரம் வெளிப்படும் என்றும் சொல்கிறார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த அற்புதம் நிகழ்ந்து விடும் என்று சாய்பாபா பக்தர்கள் நம்பிக்கையோடு உள்ளனர். இதற்கிடையே சாய்பாபா வின் 3-வது அவதாரம் குறித்து ஹலகப்பா என்ற பக்தர் வேறொரு விதமான தகவலை வெளியிட்டுள்ளார்.

சக்தியின் வடிவமான 3-வது சாய்பாபா (பிரேமாசாய்) மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் காவிரி நதிக்கரையில் இருந்து வருவார் என்கிறார். ஆதரவற்ற சிறுவனாக வரும் அவரை மீனவர் ஒருவர் எடுத்து வளர்ப்பார் என்றும், அவரது பெயர் நாளடைவில் பிரேமாசாய் என்று மாறும் என்றும் ஹலகப்பா கூறினார்.

சீரடி சாய்பாபா பிறந்த ஊர் பர்த்தி என்று புகழப்பட்டது. சாய்பாபா அவதரித்த கோலப்பள்ளி கிராமம் பிறகு புட்டபர்த்தி என்று பிரபலம் அடைந்தது. சாய்பாபாவின் 3-வது அவதாரமான பிரேமாசாய் வளரும் இடம் எதிர்காலத்தில் குனபர்த்தி என்ற பெயரில் உலகம் முழுக்க பேசப்படும் என்று சொல்கிறார்கள்.

சாய்பாபா மறு அவதாரம் பற்றிய இந்த நம்பிக்கை பக்தர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. சாய்பாபா மீண்டும் அவதாரம் எடுப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

பகவான் சத்ய சாயி பாபாவின் மிகப் பழைய படங்களில் சில (படங்கள் இணைப்பு)





24 Apr 2011

No comments:

Post a Comment